Search This Blog

Wednesday, 1 January 2014

யுகங்களைக் கடந்த ஏக புஷ்பம்

யுகங்களைக் கடந்த ஏக புஷ்பம்

திருத்தியமலை

அங்கிங்கெனாதபடி எங்கும் வீற்றிருந்து, தம்மை நாடிவரும் அடியார்கள் குறைகளைத் தீர்ப்பவன் பொன் னார் மேனியனான சிவபெருமான். அவனுக்கு   ஆயிரம் நாமங்கள் உண்டு. அவற்றில் ஒரு நாமம் ‘ஏகபுஷ்பப் பிரியநாதன்’. இந்தத் திருப்பெயரோடே ஈசன் அமர்ந்து அருளும் தலமே திருத்தியமலை. இதன் பழைய பெயர் திருத்தேசமலை.  தரை மட்டத்திலிருந்து சுமார் 200 மீட்டர் உயரத்தில் உள்ளதுதான் திருத்தியமலை. இது சிறு குன்று. தலைக்காவிரியில் இருந்து இந்த திருத்தியம லைக்கு வந்து ஏகபுஷ்பப் பிரியநாதரையும் தாயினும் நல்லாளையும் தரிசித்து வழிபட்டனராம் அகத்திய முனிவரும் அவர் மனைவி லோபாமுத்திரையும்.திருமணத்தடை, கல்வித்தடை, மணமக்களிடையே ஏற்படும் பிரச்னைகள் முதலான எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்து அருள்கிறாள், தாயினும் நல் லாள். ஆறு வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் போதும். சூரியனைக் கண்ட பனிபோல தடைகள் தானே விலகும்.

படியேறிச் சென்றால் தெய்வானையுடன் அழகன் சுப்பிரமணியர் காட்சி தருகிறார். இவர் சத்ருகளை அழித்துக் காப்பாற்றுபவர். நீதிமன்ற வழக்குகளில்   வெற்றிபெற இவரை சரணாகதி அடையலாம். செவ்வாய், சஷ்டிகளில் இவரை தரிசித்தால் சத்ருகளால் வரும் தொந்தரவுகள் நீங்கும்.அதிகார நந்தி, அம்பாளுக்கும் இறைவனுக்கும் இடையில் அமர்ந்தவாறு சுவரில் உள்ள துவாரம் மூலம் இறைவனை தரிசிக்கிறது. இத்திருக்கோயில்   ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டதாகக் கல்வெட்டு கூறுகிறது. ஏகபுஷ்பப் பிரியநாதர் என்ற பெயர் இந்த இறைவனுக்கு ஏன் வந்தது? அதற்குச் சுவையான வரலாறு ஒன்று காலங் காலமாய் கூறப்பட்டு வருகிறது.  
 
இறைவனால் படைக்கப்பட்ட மலர்கள் எத்தனையோ உள்ளன. அவற்றுள் சில இறைவனுக்குச் சாத்தப்படுகின்றன. ஆனால், ஒரு மலரை இறைவனே   காத்திருந்து ஏற்றுக் கொள்வதாக கூறப்படுகிறது. அந்த மலர் தான் ‘தேவ அர்க்கய வள்ளிப்பூ’. இது எங்கே பூக்கிறது? மரத்திலா? செடியிலா? கொடியிலா? இல்லை. ஒரு சுனையில் பல யுகங்களுக்கு ஒரே முறை பூக்கும்! இந்தச் சிறப்பு மிக்க சுனை அமைந்திருக்கும் இடம்தான் திருத்தேசமலை. சுனையில் வற்றாத நீர் உள்ளது. இப்பூவை அணிந்து மகிழ்வதற்காக யுக யுகாந்திரமாய் காத்திருப்பதால், இந்த சிவபெருமானின் திருப்பெயர், ஏகபுஷ்பப் பிரியநாதர்.இந்தப்பூ மலர்ந்து இறைவனிடம் சேர்வதைப் பார்க்க விரும்பினார், பிருங்கி முனிவர். அந்த அருமையான நேரத்தை நோக்கி தவமிருந்தார். இந்த  மலையில் பல கிளிகள் இருந்தன. அவற்றுக்கு இப்பூ பூக்கும் நேரமும் காலமும் தெரியும். அந்த விவரத்தை அவை தமக்கிடையே பேசிக்கொள்வதை  பிருங்கி முனிவர் கவனித்தார். விவரமும் புரிந்துகொண்டார். அப்போதிலிருந்து அந்தக் கிளிகளையும் கவனித்து வந்தார். அந்தப் புனிதமான நேரமும்  வந்தது. சுனையில் தோன்றிய சங்கு போன்ற தேவ அர்க்கய வள்ளிப்பூ மெல்ல நகர்ந்து போய் ஏகபுஷ்பப் பிரியநாதரின் சிரசில் அமர்ந்தது. இவ்வரிய காட்சியைக் கண்ட பிருங்கி முனிவர் ஆனந்தக் கூத்தாடினார்.

அவரையும் கிளிகளையும் தன்னடி சேர்த்தருள் செய்தார் இறைவன்.இந்தக் கோயிலில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவலிங்கத்திற்கு வில்வத்தாலும் ஆவுடையாருக்கு துளசியாலும் அர்ச்சனை செய்யப்படுகிறது. கிளிகளோடு பிருங்கி முனிவர், அகத்தியர்-லோபாமுத்ரா போற்றி வணங்கிய ஏகபுஷ்பப் பிரியநாதரையும் தாயின் நல்லாளையும் நாமும் தரிசித்து நற்ப லன் பெறுவோம். இத்தலம் திருச்சி-துறையூர் பேருந்துப் பாதையில் திருப்பைஞ்சீலியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment