தூக்கு தண்டனையையே ஒழித்துவிடலாமே!
தமிழ்நாட்டின் வரலாற்றில் மறக்கமுடியாத துயர சம்பவங்களில் ஒன்று தமிழ்மக்களை அதிகம் நேசித்த, தமிழ் மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் 1999–ம் ஆண்டு மே மாதம் 21–ந் தேதி தேர்தல் பிரசாரத்துக்காக வந்த நேரத்தில், மனித வெடிகுண்டு வெடிப்பில் உருக்குலைத்து கொல்லப்பட்ட சம்பவம்தான். இந்த வழக்கை சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்து பலரை கைது செய்து வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு பூந்தமல்லி தடா கோர்ட்டில் நடந்தபோது, முருகன், சாந்தன், பேரறிவாளன், முருகன் மனைவி நளினி உள்பட 26 பேர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டபோது, இவர்கள் 4 பேர்களுக்கு மட்டும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கவர்னருக்கு கொடுத்த கருணை மனுவில், நளினிக்கு மட்டும் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தூக்குதண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுக்கள் மீது 11 ஆண்டுகள் முடிவு எடுக்காமல் கடைசியாக தள்ளுபடி செய்யப்பட்டதை குறிப்பிட்டு, தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைக்க தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான பெஞ்சு முன்பு விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க 11 ஆண்டுகள் காலம் தாழ்த்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற காரணத்தைக்காட்டி, அவர்கள் மூவருக்கும் தூக்கு தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினர். அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே 23 ஆண்டுகள் சிறையில் இருந்த அவர்களை விடுதலை செய்ய மாநில அரசே தீர்மானிக்கலாம் என்றும் கூறியுள்ளனர். உடனடியாக நேற்று தமிழக சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, இந்த மூவர் உள்பட இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய அமைச்சரவை எடுத்துள்ள முடிவை அறிவித்துவிட்டார். ஏற்கனவே கடந்த 30.8.2011 அன்று தமிழக சட்டசபையில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த சிறப்பு தீர்மானமும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு இருந்தது.
இன்றைய சூழ்நிலையில், உலகம் முழுவதும் தூக்குதண்டனை வேண்டுமா?, அதை ஒழித்துவிடலாமா? என்ற சர்ச்சை மேலோங்கிவருகிறது. கிறிஸ்து பிறப்புக்கு முந்தைய 18–ம் நூற்றாண்டில்தான் பாபிலோனில் 25 குற்றங்களுக்கு தூக்குதண்டனை விதிக்கும்முறை சட்டமாக வந்தது. அதிலிருந்து உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பலவித முறைகளில் தூக்குதண்டனையை நிறைவேற்றி வந்தது. காலப்போக்கில் மரணத்தண்டனை தேவையா? ஒருவன் ஒரு கொலை செய்தால் அதற்கு பதிலாக சட்டபூர்வமாக அவன் உயிரைப்பறிப்பதும் ஒரு வகையில் கொலைதானே என்ற வாதங்களும் கிளம்பின. தவறு செய்யும் ஒருவனுக்கு தண்டனை என்பது அவன் செய்த குற்றத்துக்காக அவன் வருந்தும் வகையில் அளிக்கப்படுவதும், அவனை திருத்துவதும்தானே, அவன் உயிரை பதிலுக்கு பதில் பறித்துவிட்டால், அவன் செய்த குற்றத்துக்காக அவன் வருந்துவதற்குக்கூட வாய்ப்பு கொடுக்காமல் விட்டுவிடுகிறோமே என்றும் வாதம் உண்டு.
உலகில் 106 நாடுகளில் இப்போது தூக்குதண்டனை இல்லை. 1989–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15–ந் தேதி நடந்த ஐக்கிய நாட்டு பேரவையில், மரண தண்டனையை ஒழிக்கும் வகையில், அனைத்து நாடுகளையும் வேண்டிக்கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சமீபத்தில் திருச்சியில் நடந்த தி.மு.க. மாநில மாநாட்டில் தூக்குதண்டனையை அறவே ரத்து செய்ய மத்திய அரசாங்கம் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தூக்குத்தண்டனை மூலம் நாட்டில் குற்றங்கள் குறைந்துவிடவில்லையே. எனவே, தூக்குதண்டனை விதிப்பதால் சமுதாயத்திலும் குற்றங்களைக் குறைக்க முடியவில்லை, தவறு செய்தவனையும் அவன் செய்த குற்றங்களுக்காக வருந்தவைக்க முடியவில்லை. இதுமட்டுமல்லாமல், சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இன்றுவரை ஆயிரக்கணக்கானவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு இருந்தாலும், இதுவரை 52 பேர்களுக்கு மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவில் தூக்குதண்டனை வேண்டுமா?, அறவே இல்லாதவகையில் ஒழித்துவிடலாமா? என்பதை முடிவு செய்ய மத்திய, மாநில அரசாங்கங்களும், பாராளுமன்றம், சட்டமன்றங்களும் முயற்சி செய்யவேண்டும்.
No comments:
Post a Comment