Search This Blog

Friday, 27 December 2013

திருமணத்தடை நீக்கும் பாதாள கன்னியம்மன்

திருமணத்தடை நீக்கும் பாதாள கன்னியம்மன்

கோடம்பாக்கம், காமராஜர் காலனி முதல் தெருவில் பாதாள கன்னியம்மன் கோயில் உள்ளது. சுமார் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயிலில் 2 அடி ஆழத்தில் மூலவர் சிலை அமைந்துள்ளது. அதன் எதிரில் பலிபீடம் உள்ளது. கன்னியம்மனுக்கு வலது புறத்தில் கருமாரி அம்மன் கோயில் உள்ளது. இடப்புறத்தில் நாகதேவதை மற்றும் அங்காளம்மன் சிலைகள் உள்ளன. பின்புறம் தல விருட்சமான அரச மரம் உள்ளது. அதன் அருகில் வினாயகர் காட்சி அளிக்கிறார். இக்கோயிலில் ஆடி மாதத்தின் 6வது வாரத்தில் ஆடித்திருவிழா கொண்டாடப்படுகிறது.

சித்ரா பவுர்ணமிக்கு பால்குட அபிஷேகம் நடக்கிறது. நவராத்திரியின்போது அம்மனுக்கு தினம் ஒரு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடக்கிறது. மார்கழி மாதம் முழுவதும் பால் அபிஷேகம் செய்யப்படுகிறது. தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. கோயிலில் உள்ள வினாயகருக்கு வினாயகர் சதுர்த்தியின்போது சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

திருமணம் ஆகாத பெண்கள் கன்னியம்மனை வேண்டிக்கொண்டு மஞ்சள் உடை அணிந்து 3 நாட்களுக்கு விரதம் இருந்தால் திருமணத் தடை நீங்கும் என்பதும், நவராத்திரியின்போது கோயிலில் வைக்கப்படும் கொலுவில் கிருஷ்ணன் பொம்மை வைத்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. வேண்டுதல் நிறைவேறினால் அம்மனுக்கு புடவை சார்த்தி நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள். எப்படி போகணும்?: கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 5 நிமிட நடைதூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment