இந்து
கேளுங்க சொல்கிறோம்!
* எலுமிச்சம்பழ மாலையில் எத்தனை பழங்களைக் கோர்த்து அணிவிப்பது நல்லது?
சி.மிருதுபாஷிணி, ஆலந்தூர்
நிறைய எலுமிச்சம்பழ மாலைகளை அணிவித்து சில கோயில்களில் அம்மனைப் பார்க்கிற போது இவ்வளவு பாரத்தைச் சுமக்கச் செய்கிறார்களே என்று எண்ணத் தோன்றுகிறது. சாஸ்திரத்தில் இது போன்ற விஷயங்களும் இல்லை. எனினும் வழக்கத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. அவசியமான பிரார்த்தனையை முன்னிட்டு, பூமாலைகளின் நடுவில் கொஞ்சமாக, அதாவது அதிகபட்சம் 16 பழங்களைக் கோர்த்து அணிவித்தாலே போதும். பழைய மாலைகளைக் கழற்றி விட்டு புதிய மாலைகளைப் போடுவதையும் அர்ச்சகர்கள் வழக்கத்தில் கொள்ளலாம்.
**வேதனை இன்றி நிம்மதியாக உயிர் நீங்க யாரை வழிபடவேண்டும்?
அ.பழநிச்சாமி, அருப்புக்கோட்டை
சிவனை வழிபாடு செய்யும்போது, வழிபாட்டின் நிறைவில் வேண்டிக் கொள்வது இதைத்தான். அந்த ஸ்லோகத்தைத் தருகிறேன். நீங்களும் பாராயணம் செய்யுங்கள்.
""அனாயா சேன மரணம் விநா தைன்யேன ஜீவனம்
கிருபயா தேஹி மே சம்போ த்வயி பக்தி ரசஞ்சலம்''
பொருள்: ஹே சம்புவே! எனக்கு எந்த வேதனையும் இன்றி நிம்மதியாக உயிர் நீங்க வேண்டும். வாழும் காலத்தில் யாரிடமும் அடிமைப்படாமல் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். உன்னிடத்தில் நிலையான பக்தி இருக்க வேண்டும். கருணை கூர்ந்து இவற்றை அருள்புரிவாயாக.
* சந்தியாவந்தனம் செய்வதன் சிறப்பு என்ன?
எ.லிங்கேஸ்வரன், கோவை
இரு பொழுதுகள் சந்திக்கும் காலத்தை "சந்தியாகாலம்' என்பர். இரவும், காலைப் பொழுதும் சேரும் விடியற்காலைப் பொழுதைக் காலை சந்தி என்றும், காலையும் மதியமும் சந்திக்கும் வேளையை மதிய சந்தி என்றும், மாலையும், இரவும் சந்திக்கும் வேளையை சாயம் சந்தி என்றும் மூன்று சந்தியாகாலங்கள் உள்ளன. இந்த வேளைகளில் தேவர்களுக்கு வந்தனம் செய்யப்படுவதற்கு சந்தியாவந்தனம் என்று பெயர். இதில் காயத்ரீ என்னும் தேவதையை ஜபம் செய்து வழிபடுவது சிறப்பு. மங்கலாக எரியும் விளக்கின் திரியைத் தூண்டிவிட்டால் பிரகாசமாக எரியும், அதுபோல, தேவையில்லாத விஷயங்களில் நம் அறிவு மயங்கி நிற்கும்போது, அதாவது அறிவாற்றல் மங்கும்போது, அந்த காயத்ரீதேவி அறிவைத் தூண்டி அதன் ஆற்றலைப் பெருக்கி வாழ்வில் வெற்றியைத் தர வேண்டும் என வேண்டிக் கொள்வதே மந்திரத்தின் பொருள். தினமும் மூன்றுவேளை சந்தியாவந்தனம் காயத்ரீஜபம் செய்தால், சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லாருக்குமே வெற்றிதான்.
வருண ஜபத்தின் மகத்துவத்தைக் கூறுங்கள்
பி.பொன்காவியா, மதுரை
வருணனுக்கு ஜலாதிபதி என்று பெயர். மழை, சமுத்திரம், ஆறுகள் என எல்லா நீர் நிலைகளுக்கும் வருணனே தலைவன். எனவே, இவரை வழிபட்டால் கண்டிப்பாக மழை பெய்யும். இதற்கென உரிய வேத மந்திரங்களைக் கற்றுத் தேர்ந்த அறிஞர்களைக் கொண்டு ஆறு, குளம் ஏதாவது ஒன்றில் இடுப்பளவு நீரில் நின்று ஜபம் செய்வதற்கு வருணஜபம் என்று பெயர்.
No comments:
Post a Comment